Loading

Blogகண் முன்னே மனிதர்கள் மாற்றம் பெறுவதைக் காண்பது பேரின்பம்!

கண் முன்னே மனிதர்கள் மாற்றம் பெறுவதைக் காண்பது பேரின்பம்!

20-04-2024 0 Comments

கண் முன்னே மனிதர்கள் மாற்றம் பெறுவதைக் காண்பது பேரின்பம்!

பல்லாண்டுகளாய் மது குடித்தே வாழ்ந்த மனிதரொருவர், ‘இனி மதுவே இல்லை என் வாழ்வில்! விடுகிறேன், விட்டுவிட்டேன் அந்தப் பழக்கத்தை!’ என்று மலர்ச்சி மேடையில் ஏறி நின்று அழுது பகிர்கிறார்.

‘என் மனைவியை மதிக்கத் தொடங்கி விட்டேன்! மன்னிப்பு கேட்டேன்!’ என்றபடி மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து நிற்கிறார் ஒருவர்.

‘இனி ஒட்டவே முடியாது, குழந்தைகளுக்காக பொறுத்துப் போகவேண்டும் என்றாலும் ஒவ்வொரு கணமும் கடினம்!’ என்ற நிலையில் தனித்தனியே மலர்ச்சி வகுப்புக்கு வந்த கணவனும் மனைவியும் உள்ளே மாற்றம் பெற்று கைகோர்த்து ஒன்றாய் நிற்கின்றனர். சினத்தையும், அகந்தையையும் தூர வைத்துவிட்டு பொறுப்பை உணர்ந்து நிற்கும் அவர்களை கண்டு இதயம் தளும்ப மகிழ்ந்து நிற்கின்றேன் ‘இறைவா நன்றி!’ என்றியம்பிய படி.

உடல் எடை குறைத்து நலத்தின் பாதையில் நடக்கத் தொடங்கியுள்ளனர் சிலர்.

கடந்த காலத்து கசப்புகளையும் அவற்றால் உண்டான இறுக்கங்களையும் ஒரு புதிய முடிவில் கண்ணீரோடு கரைத்து கழுவித் துடைத்துவிட்டு புதிய வாழ்க்கையை எதிர்நோக்கிய படி கண்கள் விரிய சிரிக்கிறார் பெண்ணொருவர்.

கல்லூரிப் பேராசிரியப் பணி, மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்தல், குடும்ப வாழ்க்கை, மகளுக்கு தாய் என தான் வகிக்கும் பாத்திரங்களை வகுத்து உணர்ந்து திறம்பட செய்யத் தொடங்கிவிட்டார் பெண்மணி ஒருவர். பெரிய கல்லூரியின் பெரிய பேராசிரியை மலர்ச்சியை கற்பிக்கும் குருவாக உணர்ந்து ஓதுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நோயையும் எதிர்மறையையுமே எதிர்கொண்டு கையாளவேண்டிய பரிசோதனை கூட தொழிலின் பளுவில் எதிர்மறை தாக்கம் வந்து இறுகிப் போன தொழில்முனைவோர், மலர்ச்சியோடு மலர்ச்சி ஆசானோடு நல்லிணைப்பு பெற்று நேரியம் பெற்று நிமிர்ந்து நிற்கிறார். மலர்ந்து சிரிக்கிறார்.

இத்தனை நாளாய் ஏற்றி வைத்திருந்த உளைச்சல்களை இரண்டு வகுப்புகளில் உதிர்த்துவிட்டு இன்முகத்தோடு மலர்ந்து நிற்கிறார் முப்பத்தியிரண்டு வயது கொண்ட இளம் குடும்பத் தலைவியொருவர்.

‘வகுப்பு மண்டைக்குள்ளும் மனதிற்குள்ளும் ஏதோ செய்கிறது. உறங்குதல் கூட குறைந்து விட்டது, உற்சாகமாகவே இருக்கிறது அதிகாலை நான்கிற்கும்!’ என்று பகிர்வோர் பலர் உண்டு இந்த பேட்ச்சில்.

பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவன், தொழில் முனைவோர், குடும்பத்தலைவி, தொழிற்சாலை நிறுவனர்கள், ஓய்வு பெற்று அடுத்த நிலை வாழ்வுக்கு நகர்கிறவர், சிறுவணிகர், பெருவணிகர் என ஒவ்வொருவரும் மலர்ச்சியின் ஒவ்வொரு வகுப்பாக மலர்ந்து வளர்ந்து வருகின்றனர்.  

கண் முன்னே மனிதர்கள் மாற்றம் பெறுவதை காண்பது பேரின்பம்! அதற்கொரு கருவியாய் இருப்பதை உணர்வது அதனினும் பேரின்பம்! முழுமலர்ச்சி திரள் 74 பெரும் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எப்போது வியாழன், வெள்ளி வரும் என்று வகுப்பிற்காக அவர்கள் காத்திருப்பதைப் போல நானும் காத்திருக்கிறேன்.

இவர்கள் வாழ்வில் மாற்றம் பெறட்டும் என்று ஓடி ஓடி முயற்சித்த என் புதுச்சேரி மாணவர்கள் ஒவ்வொருவரும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டோம்!’ என்று மகிழ்ந்து மனம் நிறைந்து நிற்பதை காண்கிறேன், சென்ற வாரம் அவர்களோடு புதுச்சேரியில் மதிய உணவு அருந்தும் போது அவர்கள் வாயாலே பகிரக் கேட்டேன்.

இன்னும் இன்னும் வளர்ச்சியும் மலர்ச்சியும் வரட்டும்!

இறைவன் துணை செய்யட்டும்!

 

இறைவன் தாள் பணிந்து,

பரமன் பச்சைமுத்து

சென்னை

20.04.2024

Comments

Leave a Reply