நெருங்கிய உறவே நம்மை தவறாக பேசினால்

கேள்வி: மிக நெருங்கிய நண்பரே என்னைப் பற்றி இன்னொருத்தரிடம் தவறாக பேசியுள்ளார். அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. தவிர்த்து வருகிறேன். உங்கள் வீடியோ ஒன்றில் இது தவறு என்று குறிப்பிட்டுள்ளீர்களே பரமன்! அவர் செய்தது தவறில்லையா?
பதில்: ஒரு விமானப் பயணத்தில் 'ஃப்ரெண்ட்ஸ்' என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். இந்தப் படத்தைதான் தமிழிலும் 'ஃப்ரெண்ட்ஸ்' என்று மறுஆக்கம் செய்தார்கள். 'நேசமணி'யாக வடிவேலு மூல மலையாளப் படத்தை மிஞ்சி அசத்தியிருப்பார்). நாயகனின் தங்கையிடம் 'உன் அண்ணனின் நண்பனை நீ காதலிக்கிறாய். அவன் அந்த ஜமீன்தாரின் மகளோடு தவறான தொடர்பில் இருந்து விட்டு அவளை ஏமாற்றிவிட்டான்!' என்பான் ஒருவன். கொதித்த அந்தப் பெண் ஜமீன்தாருக்கு கடிதம் எழுதி விட, அதைக் கண்ட அவர் கொதித்து, குறிப்பிட்ட அந்த இளைஞனை ஆற் வைத்து அடித்து அவன் வாகனத்தை எரித்துவிடுவார். நண்பனின் நிலை பார்த்த நாயகன் கொதித்து, ஜமீந்தாரின் வீட்டிற்குப் போய் அவரது காரை கொளுத்தி விடுவான். கலெக்டர் வரை விஷயம் போக, வேறு கார் வாங்கித் தந்து இளைஞர்களை ஊரை விட்டே அனுப்பி விடும் குடும்பம்.
நிற்க! நாயகனின் தங்கையிடம் ஒருவன் வந்து பகிர்ந்த 'ஜமீன் பொண்ணு தொடர்பு' எல்லாம் சும்மா பொய் என்று பின்னே தெரிய வரும், எல்லா இழப்புகளுக்கும் நேர்ந்த பிறகு. இப்படித்தான் மனிதர்களுடனான நம் உறவுகளிலும் நிகழ்ந்து விடுகின்றன சில சமயம். நிகழ்ந்து விட அனுமதித்து விடுகிறோம் சில சமயம்.
'உன்னைப் பத்தி அப்படி பேசினாரு அவரு!' என்று சொல்பவர்களிடம், 'நீங்க கேட்டீங்களா?' 'அவர் பேசினதை நீங்களே கேட்டீங்களா? வேறு யாரும் கேட்டு அதை உங்ககிட்ட சொன்னாங்களா?' என்று கொஞ்சம் கவனம் கொடுத்து விசாரியுங்கள். அந்த இடத்திலேயே அதன் தன்மை உங்களுக்குப் புரிந்து விடும்.
உங்கள் நண்பர் அப்படி பேசியதை நீங்கள் கேட்டீர்களா? அப்படியே அவர் பேசியிருந்தாலும், அவர் என்ன பொருளில் பேசினார், அதை இவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள், அதில் இவர்கள் சேர்த்த சொந்த உணர்ச்சிகள் எவை என்பதெல்லாம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
அவ்வளவு நெருங்கிய உறவென்றால், அப்படி அவர் சொன்னாரா என்பதை அவரிடமே அழைத்து விசாரிக்கலாமே. எல்லாச் சிக்கலுமே முடிந்து விடுமே.
அப்படிச் சொன்னாரா என்று உறுதியாக தெரியாத நிலையில், 'அவர் அப்படி பேசியிருப்பார்!' என்று நம்புவது உங்களது உள் மனதையே தவறாகக் காட்டுகிறதே.
அவர் அப்படி பேசினாரா என்று தெரியாத நிலையில், 'அவர் அப்படி பேசியிருக்கலாம்!' என்ற குழப்பத்தில் அல்லது முன்முடிவில் உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது இடைவெளியை கூட்டும். உறவையே பாதிக்கும். நீங்கள் எப்போதும் போல உங்கள் இயல்புப் படி நல்லதை செய்யுங்கள். ஒரு வேளை தவறே செய்திருந்தாலும் 'அவர் நாண நன்னயம் செய்து விடல்' படி தவறு உதிர்ந்து உங்களிடம் வருவார்.
அவ்வளவு நெருங்கிய உறவென்றால், இடையில் எவரையும் விடாமல், நேரடியாக அழைத்து 'இப்படி பேசினீங்களா?' என்று கேளுங்கள்.
இரண்டிலும் நீங்கள் உங்களை இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்வீர்கள்.
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
Comments